துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணிக்கு நடத்திய பாராட்டு விழா!
துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணிக்கு 29.01.2009 வியாழக்கிழமை மாலை ரெனைசன்ஸ் ஹோட்டலில் பாராட்டு விழாவினை நடத்தியது. இவ்விழா கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இரண்டு ஆண்டு அமீரகத்தில் இந்திய மக்களுக்கு சிறப்பான சேவையினை ஆற்றி வருவதை பாராட்டும் முகமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக காயல் அல் ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களை ஓதினார். விழாக்குழு செயலாளர் இறைவசனத்தின் மொழியாக்கத்தை வாசித்தார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் சையத் எம் ஸலாஹூத்தீன்
ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையத் எம். ஸலாஹுத்தீன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பு 1976 ஆம் ஆண்டு தமிழக முஸ்லிம்கள் தங்களுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக துவங்கப்பட்டது. எதிர்பாராதவிதாமாக ஏற்படும் சூழலின் போது உதவிடும் நோக்கில் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி மக்களை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர். எந்த சந்தர்ப்பத்திலும் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் உரையாடும் திறன் கொண்டவர். இத்தகைய வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது அரிது. இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது கன்சல் ஜெனரல் இந்திய அரபுக் கலாச்சாரம் குறித்த ஆய்வு நூல் எழுதிவரும் பணியினை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அவரது முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
தான் அமீரகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் போது அங்குள்ள கட்டிடங்கள் ஏதேனும் ஒரு வகையில் ஈடிஏ நிறுவனம், இந்தியர்களது பங்களிப்பைப் பறைசாற்றும் விதமாக இருந்து வருவதை நினைக்கும் போது பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றார்.
தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். அத்தகைய பணியினை ஈமான் அமைப்பு மெற்கொண்டு வருகிறது.
இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் சையத் எம். ஸலாஹூத்தீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். கல்வ்க்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் நினைவுப் பரிசு வழங்கினார். திருமதி வேணு ராஜாமணிக்கு மரியம் ஸலாஹுத்தீன் பொன்னாடை அணிவித்தார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி தன்னைக் கௌரவித்த ஈமான் அமைப்பிற்கு நன்றியினைத் தெரிவித்தார். இது தனது வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள் எனக் குறிப்பிட்டார்.
தனது தாய்மொழி தமிழாக இருப்பினும் தான் கேரளாவில் வளர்ந்தேன். ஹிந்தி மொழியில் பயின்றேன். அதனால் தமிழை சரளாக பேச இயலவில்லை என்றார். ஈமான் அமைப்பின் மூலம் இந்திய கன்சல் ஜெனரல் அலுவலகத்தில் முஹம்மது தாஹா சிறப்பான சேவையினை மேற்கொண்டுவருவதன் மூலம் ஈமான் அமைப்பின் சேவையினை அறிய முடிகிறது.
ஈமான் அமைப்பு வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன். தினமும் 4000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு இன,மொழி பேசும் மக்கள் சகோதர வாஞ்சையுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் கல்விப் பணிக்காக ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகள் சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று.
இந்திய அரபுக் கலாச்சாரம் குறித்த நூல் ஒன்றினைத் தயாரித்து வருகிறேன். கீழக்கரை, காயல்பட்டிணம் உள்ளிட்ட நகர்கள் அரபுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய தகவலை திரட்ட உதவி வரும் நல்லுங்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் ஈமான் அமைப்பின் தலைவர் சையத் எம் ஸலாஹுத்தீன் ஈடிஏ என்னும் நிறுவனம் 60,000 க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பணிவாய்ப்பு பெற உதவி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
திருமதி வேணு ராஜாமணி தங்களது இதயத்தை தொடுவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார். விரைவில் திருச்சியில் ஈமான் அமைப்பு பள்ளிக்கூடம் ஒன்றினைத் துவங்க இருப்பதாக தெரிவித்தார். உயர்கல்வி உதவித்திட்டம் சாமான்ய மாணவர்கள் உயர்கல்வி கற்க பெரிதும் உதவி வருகிறது என்றார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பின் மூலம் இதுவரை சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளை படித்து நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார். ரமலான் இஃப்தார், இஸ்லாமிய நிகழ்ச்சிகள், இந்திய மக்களுக்கு உதவிடும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விவரித்தார்.
இந்திய கம்யூனிட்டி வெல்ஃபேர் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கே. குமார், சமூக சேவகர் மருத்துவர் சைலஜா மேனன் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
துணைத்தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஹமீதுர் ரஹ்மான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பேராளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.